சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் ரேணுகாச்சார்யா திடீர் சந்திப்பு

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை ரேணுகாச்சார்யா திடீரென்று சந்தித்து பேசினார்.

Update: 2023-08-25 21:48 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை ரேணுகாச்சார்யா திடீரென்று சந்தித்து பேசினார்.

சித்தராமையாவுடன் திடீர் சந்திப்பு

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர் மற்றும் சிவராம் ஹெப்பார் ஆகிய 2 பேரும் காங்கிரசில் சேர இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதையடுத்து, அதிருப்தியில் இருக்கும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரியும், எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளருமான ரேணுகாச்சார்யா நேற்று பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசினார். சித்தராமையாவுடன் 20 நிமிடங்களுக்கும் மேலாக அவர் பேசி இருந்தார். அதன்பிறகு, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரையும் ரேணுகாச்சார்யா சந்தித்து பேசினார்.

காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை

இதன் காரணமாக ரேணுகாச்சார்யாவும் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர இருப்பதாக தகவல் பரவியது. குறிப்பாக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் அவர், காங்கிரசில் இணைந்து தாவணகெரே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் மந்திரி ரேணுகாச்சார்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து என்னுடைய தொகுதியில் இருக்கும் பிரச்சினை குறித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது 2 பேருடனும் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தாவணகெரேயில் போட்டியிட சீட் கொடுக்கும்படி பா.ஜனதா தலைவர்களுடன் கேட்டு வருகிறேன். காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை. இதற்கு முன்பு கூட 2 பேரையும் பலமுறை சந்தித்து பேசியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்