தொடர் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பேய் மழையாக கொட்டி வருகிறது. மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா ஆகிய பகுதிகளில் இடைவிடாது தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
மேலும் வட கர்நாடக மாவட்டங்களான ஹாவேரி, பாகல்கோட்டை, பீதர், பெலகாவி, கலபுரகியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 பேர் உயிரிழப்பு
தொடர் கனமழையால் இதுவரை 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாவட்ட கலெக்டர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரண பணிகளை முடுக்கி விடுமாறு உத்தரவிட்டார். இதற்கிடையே கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு உள்ளிட்ட மலைநாடு மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்றும் கர்நாடக மாநிலத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. சிக்கமகளூரு மாவட்டத்திலும் இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் பரவலாக கனமழை கொட்டியது. இதனால் மூடிகெரே தாலுகா தர்பார்பேட்டையில் வசித்து வரும் கணேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
வினாடிக்கு 69 ஆயிரம்கன அடி நீர்
மேலும் துர்கதஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் சுனில், மெனசூரைச் சேர்ந்த பரமேஷ் ஆகியோரின் வீடுகளும் இடிந்து விழுந்தன. கொப்பா, என்.ஆர்.புரா தாலுகாக்களில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. கனமழையால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒசப்பேட்டையில், கனமழையில் சிக்கி கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி மாயமானாள். அந்த சிறுமியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
பெலகாவியிலும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் அங்குள்ள அலமட்டி அணைக்கு வினாடிக்கு 69 ஆயிரம் கன அடி நீர் வருவதாகவும், அதே அளவு நீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மராட்டியத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் அலமட்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொய்னா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் முன்னரே, அலமட்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இதனால் அணை விரைவில் நிரம்பிவிடும் என்று சொல்லப்படுகிறது.
37 வீடுகள் இடிந்தன
நேற்றைய நிலவரப்படி இடகல் அணையில் 17 சதவீத நீரும், நவிலுதீர்த்தா அணையில் 34 சதவீத நீரும், மார்க்கண்டேயா அணையில் 36 சதவீத நீரும் இருப்பு உள்ளது. கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. கனமழையால் பெலகாவியில் இதுவரை 37 வீடுகள் இடிந்துள்ளன. கானாபுரா தாலுகாவில் ஒரு அரசு பள்ளி கட்டிடம் இடிந்துள்ளது. 2 ஹெக்டேர் அளவில் வாழைத்தோட்டம் நாசமாகி உள்ளது. மேலும் பல ஏக்கரில் காய்கறி விளைச்சல் நிலங்களும் நாசமாகி உள்ளன.
இதுபற்றி பெலகாவி மாவட்ட கலெக்டர் நிதேஷ் கூறுகையில், பெலகாவியில் உள்ள அணைகளில் இன்னும் 50 சதவீத அளவில் தண்ணீர் இருப்பு வைக்க முடியும். அதன்பிறகும் அணைகளுக்கு நீர் வரத்து இருந்தால், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
காளி ஆற்றில் வெள்ளம்
மாவட்டத்தில் மழை பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான நிதி அந்தந்த தாலுகா தாசில்தார்களின் வங்கி கணக்கில் இருக்கிறது. அந்த நிதியை தாசில்தார்கள் உரிய முறையில் பயன்படுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளலாம்' என்று கூறினார். கலபுரகியிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. வெப்பம் மிகுந்த பகுதியான கலபுரகி, தற்போது மலை நாடு போல் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் இருக்கிறது.
தொடர் கனமழையால் நேற்று கலபுரகியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் இன்னும் 4 நாட்களுக்கு கலபுரகி மாவட்டத்துக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பிறக்கும் காளி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது சுமார் 3 அடிக்கு தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது. காளி ஆற்றில் இருந்து வெளியேறும் வெள்ளம் உத்தர கன்னடா மாவட்ட தாண்டேலி டவுனில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. மேலும் அங்குள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருக்கிறது.
குடகு மாவட்டத்தில் கனமழை
குடகு மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று அங்கு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி உள்ள மக்களை பரிசல் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு குழுவினர் மீட்டு வருகிறார்கள். இதற்கிடையே காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 122.05 அடியாக இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும்.
தமிழகத்துக்கு தண்ணீர்...
நேற்று காலை நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 3,207 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. அது நேற்று மாலையில் வினாடிக்கு 13,511 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதேபோல் கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம்(கடல் மட்டத்தில் இருந்து) 2284 அடி ஆகும். நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2281.33 அடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த இரு அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருமகூடலு திருவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்திற்கு செல்கிறது. இவ்வாறாக நேற்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் சென்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதுதவிர வரதா, குமுட்வதி, துங்கபத்ரா ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் உத்தர கன்னடாவில் இருந்து மராட்டியம், கோவா செல்ல முக்கிய சாலையாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 66-ல் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
உத்தர கன்னடா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஷராவதி, காளி, ஆகானசினி, கங்காவளி, துங்கா ஆகிய ஆறுகளில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அந்த ஆற்றக்கரையோரங்களில் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் கடல் மட்டத்தில் இருந்து 587.72 மீட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட துங்கா அணை, நேற்று மாலை 587.70 மீட்டர் அளவை எட்டியது. இதனால் துங்கா அணை நிரம்பியதாக அறிவிக்கப்பட்டது. அதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 51,386 கன அடி நீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு இருக்கிறது.