விமானப்படை அதிகாரி தற்கொலை தொடர்பாக ஐ.ஏ.எப். கோர்ட்டு விசாரணைக்கு உத்தரவு
இந்திய விமானப்படை அதிகாரி தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக ஐ.ஏ.எப். கோர்ட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
அதிகாரி தற்கொலை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கித் குமார் ஜா(வயது 27). இவர் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள
விமானப்படை தொழில்நுட்ப கல்லூரியில் அங்கித் குமார் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கித் மீது சக பெண் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் எதிரொலியாக அங்கித்துக்கு பயிற்சி அளிப்பதை விமானப்படை உயர் அதிகாரிகள் நிறுத்தி வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் தான் தங்கி இருந்த அறையில் அங்கித் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் தான் அங்கித் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அங்கித்தின் சகோதரர், கங்கமனகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் விமானப்படை உயர் அதிகாரிகள் 6 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
இந்த நிலையில் இந்திய விமானப்படை வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தற்கொலை செய்து கொண்ட அங்கித் மீது சக பெண் அதிகாரி கூறிய சில தவறான நடத்தைகளை இந்திய விமானப்படை உறுதி செய்து இருந்தது. அங்கித்தின் மரணம் பற்றி அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கித்தின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து உள்ளோம்.
அங்கித்தின் தற்கொலைக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படையின் விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது கோர்ட்டு விசாரணையை தொடங்கி உள்ளது. அங்கித் மரணம் தொடர்பாக போலீசாரின் விசாரணைக்கு இந்திய விமானப்படை முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.