விதி மீறல்: பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவைகளுக்கு தடை
பே-டிஎம்-ல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பணப்பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படுகிறது.
புதுடெல்லி,
பணப்பரிவர்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரும் பே-டிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பே-டிஎம் பேமெண்ட் வங்கி, பிப். 29 முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவில், சில விதிமுறைகளை பே-டிஎம் பேமெண்ட் வங்கி நிறைவு செய்யாதது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த வங்கியிலுள்ள கணக்குகளில் வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு தொகை செலுத்துவதற்கும், இணைவழி பணப்பைகள், பாஸ்டாக், என்சிஎம்சி அட்டைகள் ஆகிவற்றில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கும் பிப்.29 முதல் தடை விதிக்கப்படுகிறது. எனினும் பே-டிஎம் பேமெண்ட் வங்கிக்கணக்கில் உள்ள தொகையை வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் தொடர்ந்து எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.