ராகுல் காந்தி உடுப்பிக்கு வருகை

உடுப்பியில் வருகிற 27-ந் தேதி நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

Update: 2023-04-22 16:02 GMT

உடுப்பி;-

ராகுல் காந்தி வருகை

கர்நாடகத்தில் மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து முடித்து தேர்தல் பிரசாரம் நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக கட்சி தலைவர்களுக்கான தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. அதன்படி உடுப்பி மாவட்டத்திலும் 5 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்), பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உடுப்பி மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வர இருக்கிறார். வருகிற 27-ந் தேதி அவர் உடுப்பியில் நடைபெறும் பிரமாண்ட பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்ய இருக்கிறார். இதேபோல கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) உடுப்பிக்கு வர இருக்கிறார்.

டி.கே.சிவகுமார் பிரசாரம்

இது குறித்து உடுப்பி மாவட்டம் காங்கிரஸ் தலைவர் அசோக்குமார் கொடவூர் கூறியதாவது:-

வருகிற 23-ந் தேதி (இன்று)காலை பைந்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கலந்து கொள்ள இருக்கிறார். இதையடுத்து அவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். பின்னர் 24-ந் தேதி (நாளை)உடுப்பியில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த ரோடு ஷோ உடுப்பி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து அஜ்ஜரகாடு வரை நடைபெறுகிறது. இறுதியாக அஜ்ஜரகாடு பகுதியில் பொது கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொது கூட்டத்தில் டி.கே.சிவகுமார் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட காங்கிரஸ் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வருகிற 27-ந் தேதி உடுப்பியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்