ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு: நாளையும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் எனத்தகவல்
நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறைக்கு சம்மன் விடுத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் போது யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட விதம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இயங்கிய விதம், அதற்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த நன்கொடை, பங்குகள் மாற்றம் ஆகியவை தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.யங் இந்தியா நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது பற்றி இந்த விசாரணை அமைந்திருந்தது.
நேற்றும் இன்று என ஏறத்தாழ 19 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறைக்கு சம்மன் விடுத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை. இன்றே விசாரணையை நிறைவு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், இதனை நிராகரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நாளை விசாரணைக்கு வருமாறு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி;
மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியது. இதில் முறைகேடு நடந்ததாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழில் அதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தவைர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியது.
அதையடுத்து, சோனியாகாந்தி கடந்த 8-ந் தேதியும், ராகுல்காந்தி கடந்த 2-ந் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், வெளிநாட்டில் இருந்ததால் ராகுல்காந்தி வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் பேரில் 13-ந் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று அவருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அதன்படி ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.