ராகுல்காந்தியை ஹீரோ ஆக்க பா.ஜனதா முயற்சிக்கிறதுமம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
தனது சொந்த ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்கி, ராகுல்காந்தியை ஹீரோ ஆக்க பா.ஜனதா முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பஹராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக பேசினார்.
அவர் பேசியதாவது:-
நாட்டில், பற்றி எரியக்கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப நாடாளுமன்றத்தை முடக்கி, ராகுல்காந்தியை ஹீரோ ஆக்க பா.ஜனதா திட்டமிட்டு முயற்சித்து வருகிறது.
இதை தனது சொந்த ஆதாயத்துக்காக பா.ஜனதா செய்கிறது. அப்போதுதான், பிற எதிர்க்கட்சிகள், மக்கள் பிரச்சினைகளை எழுப்ப முடியாது என்று கருதுகிறது.
ராகுல்காந்தியை எதிர்க்கட்சி முகாமின் ஹீரோ ஆக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் ஒன்றும் எதிர்க்கட்சிகளின் 'பிக்பாஸ்' அல்ல.
பா.ஜனதாவை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறி விட்டது. மேற்கு வங்காளத்தில பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசிய உறவில் இருக்கிறது. பஞ்சாயத்து மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த கள்ள உறவை நாம் தோற்கடிக்க வேண்டும்.
சமீபத்தில், சாகர்டிகி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு பா.ஜனதாவுடனான கள்ள உறவே காரணம். மாநில காங்கிரஸ் தலைவர் (ஆதிர் ரஞ்சன் சவுத்ரி) பா.ஜனதாவுடன் ரகசிய உறவில் இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மம்தா பானர்ஜி பேச்சு குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-
திரிணாமுல் காங்கிரஸ்தான், பா.ஜனதாவுக்கு உதவ விரும்புகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பா.ஜனதாவுடன் கைகோர்த்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சி முகாமின் மண் குதிரை.
இவ்வாறு அவர் கூறினார்.