வருகிற 12, 13-ந் தேதிகளில் ராகுல்காந்தி வயநாடு தொகுதிக்கு வருகிறார்
எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கேரளாவின் வயநாடு தொகுதிக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, அவதூறு பேச்சு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தனது எம்பி. பதவியை இழந்தார். மேல்முறையீடு மனுவில் இந்த தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து அவர் நேற்று முன்தினம் தனது எம்.பி. பதவியை மீண்டும் பெற்றார். இதையடுத்து தான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கேரளாவின் வயநாடு தொகுதிக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இதுகுறித்து கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
"வருகிற 12, 13-ந் தேதிகளில் ராகுல்காந்தி தனது வயநாடு தொகுதிக்கு வருகிறார். வயநாடு மக்கள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் வென்றது, நாடாளுமன்றத்தில் தங்களின் குரல் திரும்ப எதிரொலிக்கப்போகிறது என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் ராகுல்காந்தி அந்த தொகுதியின் எம்.பி. மட்டுமல்ல. அவர்களின் குடும்பத்தில் ஒருவர்." இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.