ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோவிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - அடுத்த ஆண்டு முதல் அமல்

பூரி ஜெகன்நாதர் கோவிலில் அடுத்த ஆண்டு முதல், பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Update: 2023-10-13 17:22 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பூரி நகரில் பிரசித்தி பெற்ற ஜெகன்நாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வழிபட வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதிக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, பக்தர்கள் அரைக்கால் சட்டை, மெல்லிய, கவர்ச்சியான ஆடைகள், கிழிசல் உள்ள ஜீன்ஸ் போன்ற பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்துவரக் கூடாது.

ஆண்கள் சட்டை, பேண்ட், வேட்டி போன்றவற்றையும், பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளையும் அணிந்துவரலாம்.அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, பக்தர் சேவைக் குழுக்களுக்கும், பூரி ஓட்டல் சங்கத்துக்கும் அனுப்பியுள்ள அறிவுறுத்தலில் ஜெகன்நாதர் கோவில் நிர்வாக தலைமை நிர்வாகி ரஞ்சன் குமார் தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த கட்டுப்பாட்டை மீறி ஆடை அணிந்துவரும் பக்தர்கள், வருகிற புத்தாண்டு தினம் முதல் கோவிலின் அனைத்து வாயில்களிலும் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்