பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 'ஹிஜாப்' அணிந்து தேர்வு எழுத தடை; பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

கர்நாடகத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்கும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தோ்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.

Update: 2023-03-03 20:38 GMT

பெங்களூரு:

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தடையில்லா சான்று

கர்நாடகத்தில் புதிதாக பள்ளிகளை தொடங்குதல், அனுமதியை நீட்டிக்க கோருதல், தடையில்லா சான்று பெறுதல் போன்ற அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி கல்வித்துறையின் இணையதள பக்கத்திற்கு சென்றால் அதில் அனைத்து தகவல்களும் கிடைக்கும். தடையில்லா சான்று 17 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை தொடர்ந்து நடத்த இந்த தடையில்லா சான்று பெறுவது கட்டாயம். பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின்போதும், ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தேர்வு மையங்களுக்குள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

விளக்கம் கேட்டு நோட்டீசு

உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சில பள்ளிகள் நடத்தப்பட்டு வருவதை கண்டறிந்துள்ளோம். அவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். தேர்வுகள் முடிவடைந்த பிறகு அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் அனுமதி பெறாத பள்ளிகள் குறித்த விவரங்கள் எங்களின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்