பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பண்ட்வாலில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு-
பி.யூ.சி. மாணவி
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பால்தியா பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சவுமியா. இந்த தம்பதியின் மகள் வைஷ்ணவி (வயது 19). சந்திரசேகர், அங்குள்ள தனியார் ஜூனியல் கல்லூரியின் முதல்வராகவும், சவுமியா கல்லடுக்காவில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
வைஷ்ணவி கல்லடுக்காவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கர்நாடகம் முழுவதும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுக்காக வைஷ்ணவி தயாராகி வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், தேர்வுக்கு நேரமாகி விட்டதாகவும், விரைவாக வரும்படியும் கூறி கதவை தட்டி உள்ளனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, வைஷ்ணவி தூக்கில்
பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், வைஷ்ணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பண்ட்வால் புறநகர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வைஷ்ணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
காரணம் என்ன?
வைஷ்ணவி கல்லூரி படிப்பில் சிறப்பிடம் (காலேஜ் டாப்பர்) பிடித்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு தொடங்கி உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.