மண்டியா கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை-பரபரப்பு
மண்டியாவில் மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் ஆத்திரத்தில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டியா:
கனமழை
மண்டியா மாவட்டத்தில் மழை பெய்யும் நேரங்களில் அங்குள்ள பி.டி. காலனி பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2 மாதங்கள் தொடர்ந்து பெய்த பருவ மழை நின்றதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இதனால் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் மீண்டும் கன மழை பெய்து மக்களை பீதியடைய செய்துள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பி.டி காலனி பகுதியில் உள்ள வீடுகளில் மீண்டும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் ஏராளமான வீடுகள் நீரில் தத்தளித்தது. இதன்காரணமாக வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடி காத்திருந்தனர். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் மழை நீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். அதற்கும் மாவட்ட நிர்வாகிகள் சரியாக பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதற்காக ரூ.1.20 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டர் நேரில் வந்து எங்கள் குறைகளை கேட்கவேண்டும் என்று கூறினர். ஆனால் கலெக்டர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் பொதுமக்கள் பின்வாங்கவில்லை. போலீசாரின் தடுப்பு வேலியை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டருக்கு பதிலாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழை நின்ற பின்னர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.