குறைந்த விலைக்கு மடிக்கணினி தருவதாக மாணவியிடம் ரூ.28 ஆயிரம் மோசடி
மங்களூருவில் குறைந்த விலைக்கு மடிக்கணினி தருவதாக மாணவியிடம் ரூ.28 ஆயிரம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு-
மங்களூருவை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஒருவர், மடிக்கணினி வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் கூகுள் குரோமில் மடிக்கணினி பற்றி தேடினார். அப்போது இணையதளத்தில் ஒரு விளம்பரம் இருந்தது. அதில் குறைந்த விலைக்கு பிரபல நிறுவன மடிக்கணினி வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. இதனை பார்த்த மாணவி, உடனடியாக அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தொடர்புகொண்டார். அப்போது பிரபல நிறுவன மடிக்கணினியை ரூ.12 ஆயிரத்து தருவதாக கூறினர். இதனை மாணவியும் நம்பினார். இதையடுத்து, அந்த வாட்ஸ்-அப்பில் இருந்து ரூ.400 முன்பணம் அனுப்பி வைக்கும்படி கூறப்பட்டது. அதன்படி மாணவியும் ரூ.400-ஐ அனுப்பி வைத்தார். பின்னர் பல்வேறு தவணைகளில் ரூ.28,400-ஐ அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த மாணவி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல், மங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.