இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி அரியானாவில் போராட்டம் - நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
போராட்டக்காரர்கள் டெல்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சண்டிகர்,
இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அஹிர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரியானாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கெட்கி தவுலா சுங்கச்சாவடி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் டெல்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க போலீசார் முயன்றபோது, அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு லேசான தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.