கோலார் தங்கச்சுரங்கத்தை மீண்டும் திறக்க கோரி டெல்லியில் போராட்டம்

கோலார் தங்கச்சுரங்கத்தை மீண்டும் திறக்க கோரி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

Update: 2022-10-17 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் ஜோதிபாசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலார் தங்கச்சுரங்கம்

கோலார் தங்கச்சுரங்கம் மூடப்பட்டு 21 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் தங்கச்சுரங்க தொழிலாளிகளுக்கு சேர வேண்டிய ரூ.52 கோடி நிலுவைத்தொகை மத்திய அரசு இதுவரை கொடுக்கவில்லை. தங்கச்சுரங்கத்தில் தங்கம் இருந்தும் அதை மீண்டும் திறக்க மத்திய அரசு முன்வரவில்லை. சுரங்கத்தில் தங்கம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

எந்த ஒரு விவரத்தையும் தெரிந்துகொள்ளாமல் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறுவது கண்டிக்கத்தக்கது. கோலார் தங்கவயலில் இருந்து ஒசக்கோட்டை வரை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்கம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் தங்கச்சுரங்கத்தை மீண்டும் திறக்க வேண்டும்.

அமித்ஷா மகனுக்கு...

கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் இல்லை என்று கூறி தனியாருக்கு அதாவது மத்திய மந்திரி அமித்ஷாவின் மகனுக்கு தங்கச் சுரங்கத்தை தாரைவார்த்து கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மூடியுள்ள தங்கச்சுரங்கத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகளை சொந்தமாக வழங்கவேண்டும்.

பி.இ.எம்.எல். மற்றும் தங்கச்சுரங்க பகுதியில் காலியாக உள்ள 2,983 ஏக்கர் நிலத்தில் கர்நாடக அரசு தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(நவம்பர்) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 2 நாட்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமையில் தர்ணா போராட்டம் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்