போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைதி தப்பியோட்டம்
சிறுமியை கடத்திய வழக்கில் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போயிருந்தார். இந்தநிலையில் மக்கி கொப்பா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் ஜெயபுரா போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் போலீஸ் தேடுவதை அறிந்த ரமேஷ் தலைமறைவானார். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ரமேஷை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக ரமேஷ் போலீஸ்காரர்களிடம் கூறினார். பின்னர் அவர் சிறுநீர் கழிப்பதற்காக போலீசாருடன் வெளி்யே சென்றார். அப்போது ரமேஷ் போலீஸ்காரரை கீழே தள்ளி, தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸ்காரர்கள் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.