புதுடெல்லி:
இந்திய படைப்புக்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வித் துறை இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதம மந்திரியின் யுவா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
யுவாவின் முதல் பதிப்பில் 22 வெவ்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இளம் மற்றும் வளரும் எழுத்தாளர்களின் (30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்) பெரிய அளவில் பங்கேற்றனர். இதை கருத்தில் கொண்டு இந்த யுவா 2.0 தொடங்கப்படுகிறது
இது இந்தியா@75 திட்டத்தின் (விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாகும்) ஒரு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சியாகும். இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அறிவு அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு மொழிகளில், பல்வேறு துறைகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க இந்தத் திட்டம் உதவும்.
தேசிய கல்வி கொள்கை 2020 இளம் மனங்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால உலகில் தலைமைப் பாத்திரங்களுக்கு இளம் வாசகர்கள்/கற்பவர்களைத் தயார்படுத்தக்கூடிய கற்றல் சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது.
இளைஞர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இளம் படைப்பாற்றல் திறன் கொண்ட எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்துடன், மிக உயர்ந்த மட்டத்தில் முன்முயற்சிகளை எடுக்க உடனடித் தேவை உள்ளது. மேலும் இந்த சூழலில், படைப்பு உலகின் எதிர்கால தலைவர்களின் அடித்தளத்தை அமைப்பதில் யுவா 2.0 நீண்ட தூரம் பயணிக்கும்.
கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியத் தேசியப் புத்தக அறக்கட்டளை செயல்படுத்தும் ஏஜென்சியாக செயல்படும். இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் இந்தியத் தேசியப் புத்தக அறக்கட்டளையால் வெளியிடப்படும். மேலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு கலாச்சாரம் மற்றும் இலக்கிய பரிமாற்றத்தை உறுதிசெய்து, அதன் மூலம் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற குறிக்கோளை அடைய ஊக்குவிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எழுத்தாளர்கள் உலகின் சிறந்த எழுத்தாளர்களுடன் தொடர்புகொள்வார்கள், இலக்கிய விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பார்கள்.