பயங்கரவாதியை கனடா குடிமகன் என கூறிய பிரதமர் ட்ரூடோ... யார் இந்த நிஜ்ஜார்...?
இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக 2020-ம் ஆண்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அறிவிக்கப்பட்டார்.
டொரண்டோ,
கனடாவின் சுர்ரே நகரில் வசித்து வந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். சுர்ரே நகரத்தின், குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக செயல்பட்டு வந்த அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் குற்றச்சாட்டு கூறியதன் தொடர்ச்சியாக, இந்திய தூதர் வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து, பதிலடியாக கனடா தூதரையும் இந்தியா வெளியேற்றியது. இந்த சர்ச்சைகளுக்கு அடிப்படையான நிஜ்ஜார் யார் என்ற கேள்வி எழாமல் இல்லை.
அவர், காலிஸ்தான் புலி படையின் (கே.டி.எப்.) தலைவராக செயல்பட்டவர். இதுபற்றி குளோபல் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், 1997-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட்டில் கனடாவுக்கு நிஜ்ஜார் சென்றார்.
அவருடைய அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் ஒருவரை திருமணம் செய்ததும், நிஜ்ஜாருக்கான குடியுரிமையை அந்த பெண் அவருக்காக முன்மொழிந்துள்ளார். ஆனால், அதுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இந்த தடை செய்யப்பட்ட கே.டி.எப். அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, பயிற்சி வழங்குவது போன்றவற்றில் அவர் ஈடுபட்டுள்ளார்.
நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக, பல்வேறு முறை அந்நாட்டை தொடர்பு கொண்டு வருத்தங்களை தெரிவித்திருந்தது.
2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, அப்போது பஞ்சாப் முதல்-மந்திரியாக இருந்த அமரீந்தர் சிங் அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றது.
இதன்பின் 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் போலீசார் கேட்டு கொண்டனர்.
2007-ல் பஞ்சாப்பில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்துள்ளார்.
2010-ம் ஆண்டு பாட்டியாலாவில் கோவில் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கிலும் அவர் மீது வழக்கு பதிவானது.
2015-ம் ஆண்டு இந்து தலைவர்களை இலக்காக கொண்டு செயல்பட்டதில் அவருக்கும் பங்கு உள்ளது என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக மற்றொரு வழக்கு பதிவானது.
இந்து மத தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில், 2016-ல் மற்றொரு வழக்கு பதிவானது. 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அவருக்கு எதிராக, தேடுதல் சுற்றறிக்கை மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகியவை பிறப்பிக்கப்பட்டன.
2018-ல் பஞ்சாப்பில் நடந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் படுகொலையில் உள்ள தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியது.
2020-ம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. பஞ்சாப்பின் ஜலந்தரில், இந்து சாமியார் ஒருவரை கொல்ல சதி திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 2022-ம் ஆண்டில் அவருக்கு எதிராக ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும், கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.
கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்தி கூறினார். இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அச்சத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய, கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனினும், ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.
இந்த நிலையில், கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை வெளியேற்றி கனடா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை, கனடா நாட்டு வெளியுறவு மந்திரி மெலனி ஜாலி உறுதிப்படுத்தினார். எனினும், இந்திய தூதருடைய பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிடவில்லை.
இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரூன் மெக்கேவை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. இதன்படி, 5 நாட்களுக்குள் அவர் இந்தியாவை விட்டு வெளியேறும்படி கேட்டு கொண்டுள்ளது.