நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி-முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2023-08-14 20:57 GMT

பெங்களூரு:-

ஒழித்துக்கட்ட முயற்சி

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசு ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுக திட்டங்களை அமல்படுத்துகிறது. மறுபுறம் விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஊழல், தவறான ஆட்சி நிர்வாகத்தை நடத்தி நாட்டு மக்களை பெரும் கஷ்டத்தில் சிக்க வைத்துள்ளது. இவற்றை மனதில் வைத்து கர்நாடக மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்துள்ளனர். அரசியல் சாசனத்தை ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறார்கள்.

கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய வரி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்காமல் கர்நாடக மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. காங்கிரஸ் அரசு ஏழை மக்களின் பாக்கெட்டில் உத்தரவாத திட்டங்கள் மூலம் பணத்தை போடுகிறது. இதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். கர்நாடக மாதிரி இந்த திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.

அரிசி வழங்க மாட்டோம்

ஏழை மக்களுக்கு வழங்க அரிசி வழங்குமாறு கேட்டோம். இதை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இப்போது ஆயிரக்கணக்கான டன் அரிசி பாழாகி வருகிறது. அரிசி பாழானாலும் பரவாயில்லை, புளு வைத்தாலும் பரவாயில்லை, ஏழைகளுக்கு அரிசி வழங்க மாட்டோம் என்ற மனநிலையில் மத்திய அரசு இருப்பது அநாகரீகமானது, கொடூரமானது.

நான் எனது அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது இல்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவது இல்லை. குமாரசாமி குற்றச்சாட்டை கூறிவிட்டு ஓடிவிடுவார். அவர் தனது கட்சியை மறந்துவிட்டார்.

பா.ஜனதாவின் செய்தித்தொடர்பாளரை போல் அவர் பேசுகிறார். காலி 'பென் டிரைவ்'வை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவர் சுற்றுகிறார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

------

Tags:    

மேலும் செய்திகள்