பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் பேச்சு 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். இரு தரப்பிலும் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

Update: 2023-03-10 21:15 GMT

புதுடெல்லி, 

பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். இரு தரப்பிலும் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஆஸ்திரேலிய பிரதமருக்கு வரவேற்பு

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் 4 நாள் அரசு முறைப்பயணமாக கடந்த 8-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார்.

ஆமதாபாத், மும்பை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு டெல்லி வந்த அவரை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி நேற்று வரவேற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு சம்பிரதாயபூர்வமான சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

ராஜ்காட்டில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அதைத் தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் முதலாவது இரு தரப்பு வருடாந்திர உச்சி மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடியும், ஆஸ்திரலேிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும் சந்தித்து பேசினார்கள். இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

குறிப்பாக தூய்மை எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, முக்கிய தாதுக்கள், குடியேற்றம், வினியோகம், கல்வி, கலாசாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் அவர்கள் பேசினர்.

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும் நிருபர்களைச் சந்தித்து பேசினர்.

இந்து கோவில்கள் தாக்குதல் பற்றி பிரச்சினை

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்து கோவில்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டு இருப்பது வருத்தம் தருகிற விஷயம் ஆகும். இத்தகைய தகவல்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் கவலைக்குள்ளாக்குவது இயல்பு.

இந்த உணர்வுகளையும், கவலைகளையும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசிடம் தெரிவித்தேன். அவர் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்புக்கு சிறப்பு முன்னுரிமை அளிப்பேன் என வாக்குறுதி அளித்தார். இந்த விவகாரத்தில் எங்கள் குழுக்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். முடிந்தவரையில் ஒத்துழைப்பு அளிக்கும்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூண்

இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு தரப்பு உறவில் மிக முக்கிய தூணாக விளங்குகிறது.

இன்றைக்கு நாங்கள் இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு குறித்தும், இரு தரப்பு ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் பேசினோம்.

நம்பத்தகுந்த, வலுவான உலகளாவிய வினியோகச்சங்கிலிகளை மேம்படுத்த பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பது பற்றியும் விவாதித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பன்முகத்தன்மை உறவு

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியதாவது:-

இந்திய, ஆஸ்திரேலிய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிப்பதற்கு நானும், பிரதமர் மோடியும் ஒப்புக்கொண்டுள்ளோம். இதை இந்த ஆண்டே இறுதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவுடனான எங்கள் நாட்டின் உறவு பன்முகத்தன்மை கொண்டது. மே மாதம் 'குவாட்' தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ஆஸ்திரேலியா வருவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நான் செப்டம்பர் மாதம் 'ஜி-20' உச்சி மாநாட்டுக்காக இங்கு மீண்டும் வருவதையும் எதிர்நோக்கி உள்ளேன்.

இரு தரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்.

ஆஸ்திரேலிய, இந்திய சூரிய மின்சக்தி பணிக்குழு தொடர்பான விதிமுறைகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய பாதுகாப்புச்சூழலின் நிச்சயமற்ற நிலைமை வளர்ந்து வருவது பற்றியும் நாங்கள் விவாதித்தோம். இந்திய, ஆஸ்திரேலிய ராணுவ கூட்டை வலுப்படுத்த உறுதி எடுத்துக்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் விளையாட்டு, புத்தாக்கம், ஒலி காட்சி தயாரிப்பு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

Tags:    

மேலும் செய்திகள்