பிரதமர் மோடி வருகிற 6-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகை

பிரதமர் மோடி வருகிற 6-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகை தருகிறார். தார்வார் ஐ.ஐ.டி. வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

Update: 2023-01-21 21:07 GMT

பெங்களூரு:-

தேசிய இளைஞர் தின விழா

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து செல்கிறார். கடந்த 12-ந் தேதி உப்பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவை அவர் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் அவர் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 'ரோடு ஷோ' நடத்தி ஆதரவு திரட்டினார். அதைத்தொடர்ந்து அவர் கடந்த 19-ந் தேதி கலபுரகி, யாதகிரிக்கு வருகை தந்து அங்கு ரூ.10 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரே மாதத்தில் பிரதமர் மோடி 2 முறை கர்நாடகம் வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் வருகிற 6-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகிறார். அன்றைய தினம் தார்வாருக்கு வருகை தரும் அவர், அங்கு 500 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்வார் ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் சுமார் 600 ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்டுள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தின் ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார். இந்த தொழிற்சாலைக்கு கடந்த 2016-ம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாரம்

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இனி வரும் நாட்களில் பிரதமர் மோடி அடிக்கடி வருகை தர உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்