பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி மீண்டும் கர்நாடகம் வருகை
பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகை தர உள்ளார். கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:
தாவணகெரேயில் பொதுக்கூட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிற மத்திய மந்திரிகள், பா. ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடிக்கடி கர்நாடகம் வந்து தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரதமர் மோடி கடந்த 2 மாதத்தில் 6 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்காக விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா நடத்தி வருகிறது. இந்த யாத்திரை வருகிற 25-ந் தேதி தாவணகெரே மாவட்டத்தில் நிறைவு பெற உள்ளது. இதற்காக தாவணகெரேயில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேச உள்ளார்.
மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
இதற்காக பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகிறார். அன்றைய தினம் காலையில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகிறார். பெங்களூரு கே.ஆர்.புரம் மற்றும் ஒயிட்பீல்டு இடையே புதிதாக மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அன்றைய தினம் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அதற்கு முன்பாக மகாதேவபுரா தொகுதியில் இருக்கும் சத்யசாய் ஆசிரமத்தில் இருந்து ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல இருக்கிறார். மேலும் கே.ஆர்.புரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஒயிட்பீல்டு வரை அவர் மெட்ரோ ரெயிலிலேயே பயணம் செய்யவும் இருக்கிறார்.
சிக்பள்ளாப்பூரில் மருத்துவ கல்லூரி
அதன்பிறகு, பெங்களூருவில் இருந்து சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு மருத்துவ கல்லூரியை அவர் திறந்து வைக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு சென்று பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேச இருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் பேரை திரட்ட பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே 13.75 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. வழக்கமாக கே.ஆர்.புரத்தில் இருந்து ஒயிட்பீல்டுக்கு சொந்த வாகனத்தில் செல்ல ஒரு மணிநேரம் ஆகும். ஆனால் மெட்ரோ ரெயிலில் வெறும் 24 நிமிடத்தில் சென்று விடலாம் என்று மெட்ரோ ரெயில் நிாவாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.