தமிழகத்தில் 18 உள்பட நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் சீரமைப்பு பிரதமர் தொடங்கிவைத்தார்...!
தமிழகத்தில் 18 உள்பட நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணியை பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 1,309 ரெயில் நிலையங்களை மறுசீரமைக்க 'அமுத பாரத் நிலைய திட்டம்' கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரெயில் நிலையங்களை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மோடி அடிக்கல் நாட்டினார்
இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார். ரூ.24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, கரூர், மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பூர், போத்தனூர், சேலம், தென்காசி, தஞ்சை, திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 18 ரெயில் நிலையங்கள் ரூ.381 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி ரெயில் நிலையமும் அடங்கும். புதுச்சேரி ரெயில் நிலைய மறுசீரமைப்புக்கு மட்டும் ரூ.93 கோடி செலவிடப்படும்.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான்- தலா 55 ரெயில் நிலையங்கள், பீகார்-49, மராட்டியம்-44, மேற்கு வங்காளம்-37, மத்தியபிரதேசம்-34, அசாம்-32, ஒடிசா-25, பஞ்சாப்-22, குஜராத், தெலுங்கானா-தலா 21, ஜார்கண்ட்-20, ஆந்திரா-18, அரியானா-15, கர்நாடகா-13 என மொத்தம் 508 ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன.
வசதிகள்
இந்த நிலையங்களில், உலக தரத்துக்கு பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். ரெயில் நிலைய கட்டிடம், அந்தந்த ஊரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் வடிவமைக்கப்படும்.
தங்கும் அறைகள், நடைமேடை, பெயர் பலகைகள், நடமாடும் படிக்கட்டு, மின்தூக்கி, பன்னடுக்கு வாகன நிறுத்தம், காத்திருப்பு வசதி மாற்றுத்திறனாளி வசதிகள், போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், எதிர்க்கட்சிகளைபிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
சில எதிர்க்கட்சிகள், தாங்களும் வேலை செய்ய மாட்டோம், மற்றவர்களையும் வேலை செய்ய விடமாட்டோம் என்ற கொள்கையை பின்பற்றி வருகின்றன. நவீன நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி இருக்கிறோம். ஆனால் அதைக்கூட எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
வளர்ச்சிக்கு முன்னுரிமை
70 ஆண்டுகளாக அவர்கள் போர் நினைவிடம் கட்டவில்லை. அதை நாம் கட்டியபோது, கொஞ்சம் கூட வெட்க மின்றி அதையும் எதிர்த்தனர்.
சர்தார் வல்லபாய் படேல் சிலை, உலகிலேயே பெரிய சிலை ஆகும். இந்தியர்கள் அனைவரும் அதை நினைத்து பெருமைப்படுகிறார்கள். சில கட்சிகள், தேர்தல் நேரத்தில் மட்டும் படேலை நினைவு கொள்வார்கள். அந்த கட்சிகளின் பெரிய தலைவர்கள், படேல் சிலைக்கு சென்றுமரியாதை செலுத்தியதே இல்லை.
எதிர்க்கட்சிகள், எதிர்மறை அரசியல் செய்கின்றன. ஆனால், நாம் எதிர்மறை அரசியலை புறந்தள்ளி, நேர்மறை அரசியல் செய்கின்றோம். வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.
ஊழலே வெளியேறு
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தால் இந்தியர்கள் கவரப்பட்டுள்ளனர். அதே பாணியில், 'ஊழலே வெளியேறு, 'குடும்ப அரசியலே வெளியேறு', 'தாஜா செய்யும் அரசியலே வெளியேறு' என்று மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இன்று, ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீதே இருக்கிறது. இந்தியாவின் கவுரவம், உலக அரங்கில் அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலகத்தின் அணுகுமுறை மாறிவிட்டது.
அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, 30 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை அரசை இந்தியர்கள் தேர்வு செய்துள்ளனர். இரண்டு, அந்த தனிப்பெரும்பான்மை அரசு, பெரிய முடிவுகளை எடுப்பதுடன், நாடு சந்திக்கும் சவால்களுக்கு நிரந்தர தீர்வு காண பாடுபட்டு வருகிறது.
புரட்சிகர மாற்றம்
வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றும் அமுத காலத்தின் தொடக்கத்தில் இந்தியா இருக்கிறது. இந்த உணர்வுடன் இந்திய ரெயில்வேயில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
508 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு, ரெயில்வே உள்கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும். ரெயில்வேக்கானபட்ஜெட் ஒதுக்கீடு, கடந்த9 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சென்னையில் விழா
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற திட்ட தொடக்க விழாவில் எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன், தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டை தொடர்ந்து தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட புதுச்சேரி ரெயில் நிலையம், கேரளாவில் காசர்கோடு, பையனூர், வடக்காரா, திரூர் மற்றும் சொரணூர் ஆகிய 5 ரெயில் நிலையங்களும், கர்நாடகாவில் மங்களூரு ரெயில் நிலையமும் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.