சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி மரியாதை
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் மலர்துவி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி,
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார்.
இந்தியாவுடன் கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இணைய வைத்தவர். அவரது 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா மற்றும் மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.