"இந்திய கடற்படையின் தயாரிப்புகள் எந்த ஆக்கிரமிப்புக்கும் தூண்டுதல் அல்ல" - ராஜ்நாத் சிங்
இந்திய கடற்படையின் ஏற்பாடுகள் யாருக்கும் எதிரானது அல்ல என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கார்வார்,
கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள கடற்படைத் தளத்திற்கு இரண்டு நாள் பயணமாக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அங்கு அவர் இந்தியாவின் அதிநவீன கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் கந்தேரியில் இன்று கடலுக்கு அடியில் பயணம் செய்து கப்பலின் போர் திறன் மற்றும் தாக்குதல் வலிமை குறித்து கேட்டறிந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஐஎன்எஸ் கந்தேரி 'மேக்-இன்-இந்தியா' திறன்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய கடற்படையின் எந்தவொரு தயாரிப்பு மற்றும் ஏற்பாடுகளும் ஆக்கிரமிப்பிற்கான தூண்டுதல் அல்ல. அதே நேரத்தில் அவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்படுபவை.
இந்திய கடற்படை ஒரு நவீன, சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான படையாகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விழிப்புடனும், வீரத்துடனும், வெற்றியுடனும் இருக்கும் திறனைக் கொண்டது நமது கடற்படை. இன்று இந்திய கடற்படை உலகின் முன்னணி கடற்படைகளில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் உலகின் பெரிய கடல் படைகள் இந்தியாவுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளன.
இந்திய கடற்படையின் ஏற்பாடுகள் யாருக்கும் எதிரானது அல்ல. ஆனால் இது அமைதி மற்றும் செழிப்பை நோக்கமாகக் கொண்டது.
இவ்வாறு அவர் பேசினார்.