ஹாசனாம்பா தேவி கோவிலில் பிரஜ்வல் ரேவண்ணா எம்.எல்.ஏ மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரீஷ் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
பிரஜ்வல் ரேவண்ணா எம்.எல்.ஏ., ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரீஷ் சாமி தரிசனம்
ஹாசன்:
ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேசி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் திறக்கப்படும். இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு ஹாசனாம்பா கோவில் நடை கடந்த 13-ந்தேதி திறக்கப்பட்டது. 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். முதல்நாளன்று கோவில் நடை திறக்கப்பட்டு ஹாசனாம்பா தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த நாள் முதல் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஏராளமான பக்தர்கள் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
4-வது நாளான நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். ஹாசன் மாவட்ட முன்னாள் கலெக்டரான ஆர்.கிரிஷ் தனது குடும்பத்துடன் வந்து ஹாசனாம்பா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகள் ஹாசன் மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகித்தேன். பொதுமக்கள் எனக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். தற்போது நான் பணி இடமாற்றம் செய்யப்பட்டாலும் ஹாசனாம்பா தேவியை மறக்க முடியவில்லை. அதனால் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளேன். இதேபோல் பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரஜ்வல் ரேவண்ணாவும், ஹாசனாம்பா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.