கொதிக்கும் சாம்பார் கொட்டி உடல் வெந்து 1½ வயது குழந்தை சாவு
கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் உடல் வெந்து 1½ வயது குழந்தை உயிரிழந்தது.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் பெலேபாலா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி மாரியம்மா. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலையில் வீட்டில் மாரியம்மா சமைத்துக் கொண்டிருந்தார். பின்னர் சாம்பார் தயார் செய்து கொண்டிருந்தார். சாம்பார் கொதித்துக் கொண்டிருந்த வேளையில் மாரியம்மா வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, சாம்பார் இருந்த பாத்திரத்தை பிடித்து இழுத்தது. இதனால் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் குழந்தையின் மீது கொட்டியது. இதில் குழந்தையின் உடல் வெந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை மாரியம்மாவும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இதுபற்றி குந்துகோல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.