3-வது முறை பிரதமராக பதவியேற்ற மோடிக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

ஜனாதிபதி மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

Update: 2024-06-10 12:41 GMT

புதுச்சேரி,

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து, மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோடிக்கு பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 71 மத்திய மந்திரிகள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நரேந்திர மோடியின் ஹாட்ரிக் வெற்றி, மக்கள் நலனை மேம்படுத்தும் அவரது நோக்கம் மற்றும் பரந்த கொள்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றுள்ளார் என்பதற்கு சான்றாகும்.

மோடியின் தலைமையில் சுகாதாரம், கல்வி, விவசாயம், பெண்கள் நலன் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நாடு தொடர்ந்து வளர்ச்சி பெறும். வரலாற்று சிறப்புமிக்க அற்புதமான வெற்றியைப் பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைக்கும் மோடியை எனது சார்பாகவும், புதுச்சேரி மக்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்