கர்நாடகாவில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு; கூடுதல் டி.ஜி.பி.யிடம் இந்து அமைப்புகள் கோரிக்கை
கர்நாடகாவில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி.யிடம் இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பெங்களூரு:
'தி கேரளா ஸ்டோரி'
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் திரையிடப்படவில்லை. பெங்களூருவில் குறிப்பிட்ட சில வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பா.ஜனதாவினர் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கர்நாடகம் முழுவதும் திரையிட வேண்டும் என்றும், அதற்கு இந்து அமைப்புகள் அனைத்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் நேற்று கர்நாடக மாநில கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமாரை நேரில் சந்தித்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி இருப்பதால் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டன.
கொலை மிரட்டல்
அதன்பேரில் மாநிலத்தில் முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கூடுதல் டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும், இதுதொடர்பாக அவர் சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அடா சர்மாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்திருந்தன. தற்போது இன்னொரு நடிகை சோனியா பலானி என்பவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அதனால் அவர்கள் இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.