மர்ம சாவில் திருப்பம்: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொலை செய்தது அம்பலம் - கணவர், மாமியார் கைது

திருச்சூர் அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-15 01:39 GMT

திருச்சூர்:

திருச்சூர் மாவட்டம் முல்லைசேரி அருகே நரியம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகன் சுருதி (வயது 26). இவருக்கும், பெரிங்கோட்டுகரா அருகே கருவேலி பகுதியை சேர்ந்த அருண் (36) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான 14 நாட்களிலேயே சுருதி தனது கணவர் வீட்டு கழிப்பறையில் பிணமாக கிடந்தார்.

இதுதொடர்பாக கணவரின் பெற்றோர் சுருதி மயங்கி விழுந்து இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரிங்கோட்டுகரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியும், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து சுருதியின் பெற்றோர் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், சுருதியின் கணவரும், மாமியாரும் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் கொடுத்தனர். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக திருமணமான இளம்பெண் இறந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுருதியின் பெற்றோர் கேரள ஐகோர்ட்டில் புதுமண பெண் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு வழக்கை மாற்றம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி வழக்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சுருதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அருண், அவரது தாயார் திரௌபதி (62) ஆகிய 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுருதியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததும், சுருதியை கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அருண், திரௌபதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 2 பேரும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்