கருப்புச்சட்டை அணிந்து மக்கள் நம்பிக்கை பெற்றார் பெரியார் - பிரதமர் கருத்துக்கு ப.சிதம்பரம் பதில்
தந்தை ஈவெரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்து மக்கள் நம்பிக்கை பெற்றார் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ம் தேதி, மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். காங்கிரசின் இந்த போராட்டத்தை விமர்சித்த உள்துறை மந்திரி அமித் ஷா, அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானத்தை எதிர்க்கவே, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அதே நாளில் கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது என்றார்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்தார். அரியானா மாநிலம், பானிபட்டில் நடந்த எத்தனால் ஆலை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,
"சிலர் விரக்தியில் பிளாக் மேஜிக்கை நாடுகிறார்கள். பிளாக் மேஜிக்கை அவர்கள் பிரச்சாரம் செய்ய முயற்சித்ததை ஆகஸ்ட் 5ஆம் தேதி நாம் பார்த்தோம். கருப்பு ஆடை அணிவதன் மூலம் தங்களின் விரக்தியின் காலம் முடிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு பிளாக் மேஜிக் செய்தாலும், மூடநம்பிக்கைகளை நம்பினாலும், மக்கள் அவர்களை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்" என்று காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.
இந்தநிலையில், இதற்கு பதில் அளித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்,
கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும் என தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.