பிரதமர் மோடியின் வருகையால் சட்டசபை தேர்தலில் தாக்கம் ஏற்படாது; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சொல்கிறார்

பிரதமர் மோடியின் வருகையால் சட்டசபை தேர்தலில் தாக்கம் ஏற்படாது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சொல்கிறார்.

Update: 2023-04-21 22:37 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தல் முக்கியமாக உள்ளூர் மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை முன்னுறித்தி காங்கிரஸ் கட்சி போட்டியிடும். நாங்கள் எங்கள் ஆட்சியில் உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம். தேசிய அளவில் மோடி மற்றும் ராகுல்காந்தி இடையே போட்டி நிலவுவதாக மக்கள் கருதுகிறார்கள். இது வகுப்புவாத மற்றும் மதச்சார்பற்ற அரசியலுக்கு இடையிலான சண்டை. பிரதமர் மோடியின் வருகையால் கர்நாடக சட்டசபை தேர்தலிலும், மக்களிடமும் எந்த தாக்கமும் ஏற்படாது. ஏனெனில் இது மாநில தேர்தல், இது தேசிய தேர்தல் அல்ல. முக்கிய உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் பா.ஜனதா அரசின் தவறான ஆட்சியை பரிசீலித்து மக்கள் வாக்களிக்க உள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் முடிவு செய்துவிட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமையின் மீது நம்பிக்கை இருக்கிறது. தெரிகிறது. மாநிலத்தில் சிறுபான்மையினரின் நலனை காக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். மற்ற சமுதாயத்தினரும் கண்டிப்பாக காங்கிரசுக்கு தான் ஓட்டு போடுவார்கள். அதைத்தான் நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்