பிரதமர் மோடி நாளை கர்நாடகம் செல்கிறார்

பெங்களூரு, மைசூருவில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை கர்நாடகம் வருகிறார்.

Update: 2022-06-19 16:19 GMT

பெங்களூரு,

பெங்களூரு, மைசூருவில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இன்று காலை 11.55 மணிக்கு பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்திற்கு வருகிறார். 12 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கெங்கேரிக்கு செல்கிறார். அங்கு கொம்மகட்டாவில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொண்டு, பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அதன் பிறகு பகல் 2.20 மணிக்கு அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள அரசு பொருளாதார கல்லூரி மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். மாலை 4.50 மணிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு மைசூரு மகாராஜா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதன் பிறகு அவர் மாலை 6.20 மணிக்கு சுத்தூர் மடத்திற்கு செல்கிறார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் அதை முடித்து கொண்டு மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்த பிறகு மைசூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்குகிறார். செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்