பிரதமர் மோடி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை நாளை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை நாளை காலை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

Update: 2023-01-02 10:55 GMT



புதுடெல்லி,


பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை நாளை காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியானது, ராஷ்டிரசந்த் துகாடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலை கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, மத்திய மந்திரி நிதின் கட்காரி, மத்திய இணை மந்திரி ஜிதேந்திரா சிங், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இந்திய அறிவியல் மாநாட்டின் இந்த ஆண்டிற்கான மைய பொருளாக, மகளிருக்கு அதிகாரமளித்தலுடன் கூடிய நீடித்த வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்பது இருக்கும்.

இந்த மாநாட்டில் நீடித்த வளர்ச்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவற்றை அடைவதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு ஆகிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படும்.

இதில் பங்கு பெறுவோர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி விவாதிப்பார்கள்.

பெண்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட கல்விகளில், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் பங்கேற்றல் ஆகியவற்றை சம அளவில் கிடைக்க செய்வதற்கான வழிகளை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் மகளிரின் பங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்படும். அதில், பிரபல பெண் விஞ்ஞானிகள் சொற்பொழிவு ஆற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகள் 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை மகாத்மா ஜோதிபா புலே பல்கலை கழகத்தின் கல்வி வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு இணையாக நடத்தப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்