ஜி 20 -மாநாடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்: பிரதமர் மோடி, மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர்

ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Update: 2022-12-05 05:06 GMT

புதுடெல்லி

ஜி 20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. சுழற்சி முறையில் ஆண்டு தோறும் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. ஜி 20 உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜி20 உச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவரும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்