ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பை ஊக்குவித்த பிரதமர் மோடி: ஜி-20 சிறப்பு செயலாளர் பேட்டி

நாடு முழுவதும் ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு திட்டத்தினை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-09-09 11:16 GMT

புதுடெல்லி,

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

ஜி-20 சிறப்பு செயலாளர் முக்தேஷ் பர்தேஷி இன்று கூறும்போது, இந்தியாவின் வளம் நிறைந்த கலாசார பாரம்பரியம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.

ஜி-20 பயணத்தில் ஓர் அத்தியாவசிய பொருளாக, கலைபொருட்கள் அங்கம் வகிக்கின்றன. நாட்டில், ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு என்ற திட்டம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஜி-20 கூட்டங்கள் வழியே அவர்கள் இந்த ஊக்குவிப்பை பெற்றனர் என கூறியுள்ளார்.

இதற்காக கடந்த ஓராண்டாக கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. டெல்லியில் உச்சி மாநாடு நடைபெறும் சூழலில், ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகள் மற்றும் மாநிலங்கள் இதில் பங்கேற்றன. இதனை நீங்கள் பார்த்திருக்கலாம் என கூறினார்.

இந்த ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டம் ஆனது, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் கீழ் தொடங்கப்பட்டு செயல்படுகிறது.

நாடும், அதன் மக்களும் சுயசார்புடன் திகழ வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த திட்டம். இதனால் நாட்டின் அனைத்து மாவட்டங்களும் சமஅளவிலான வளர்ச்சியை பெறும். இவற்றில் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் உள்பட பல்வேறு பிரிவுகளை சார்ந்த நாடு முழுவதுமுள்ள பொருட்களும் காட்சிப்படுத்தப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்