'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடிய ஜெர்மனி தூதரக அதிகாரிகள் பிரதமர் மோடி பாராட்டு
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படம்
புதுடெல்லி,
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை 'நாட்டு நாட்டு' பாடல் வென்று சாதனை படைத்தது.
இதனிடையே 'நாட்டு நாட்டு' பாடலை மொழியை கடந்து உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் மிகவும் பரபரப்பான பகுதியான சாந்தினி சவுக் என்கிற பகுதியில் ஜெர்மனி நாட்டின் தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோவை இந்தியாவுக்கு ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மேன் டுவிட்டரில் பகிர, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடிய ஜெர்மனி தூதரக அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் வண்ணங்கள். ஜெர்மனி நாட்டினர் சிறப்பாக நடனம் ஆடியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.