பிரதமர் மோடி - இங்கிலாந்து மன்னர் சார்லஸ்சுடன் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்சுடன் தொலை பேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-01-03 16:52 GMT

புதுடெல்லி,

இங்கிலாந்து ராணி எலிசபெத் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அதைத்தொடர்ந்து, அவருடைய மகன் சார்லஸ், மன்னராக பொறுப்பேற்றார்.

இந்தநிலையில், மன்னர் சார்லசை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சார்லஸ் மன்னரான பிறகு அவருடன் மோடி பேசுவது இதுவே முதல்முறை ஆகும்.

''மன்னர் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும்'' என்று சார்லசுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம்

அப்போது, பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

இந்த பிரச்சினைகளில் ஆர்வம் செலுத்தி வருவதற்கு சார்லசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

ஜி20 தலைமை

ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவின் முன்னுரிமை பணிகள் குறித்து மோடி எடுத்துரைத்தார். காமன்வெல்த் நாடுகள் பற்றியும், அதன் செயல்பாடுகளை வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் பேசினர்.

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை குறித்த 'லைப்' திட்டம் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தினர், இரு நாடுகள் இடையே 'வாழும் பாலம்' போல் திகழ்வதாக இருவரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த உரையாடலை பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்