ஜப்பானுக்கு செல்லும் போதெல்லாம் பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்துகிறார்; மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

பிரதமர் மோடி ஜப்பானுக்கு செல்லும் போதெல்லாம் பண மதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்துவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2023-05-20 18:45 GMT

பெங்களூரு:

புதிய உத்தரவு

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா நடைபெற்று முடிந்த பிறகு தலைவர்கள் பேசினர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் ஜப்பான் நாட்டுக்கு செல்லும் போதெல்லாம், பண மதிப்பிழப்பு திட்டத்தை செயல்படுத்திவிட்டு செல்கிறார்.

அவர் கடந்த முறை ஜப்பான் நாட்டுக்கு சென்றபோது, ஆயிரம் ரூபாய் நோட்டை மதிப்பிழப்பு செய்தார். இந்த முறை அவர் ஜப்பானுக்கு சென்று இருக்கும்போது, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்துள்ளார். இதனால் நாட்டிற்கு நன்மை பயக்கிறதா? அல்லது இழப்பு ஏற்படுகிறதா? என்று அவருக்கு தெரியாது.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள்

இந்த பணமதிப்பிழப்பு திட்டத்தால் கடந்த முறையும் மக்கள் கஷ்டப்பட்டனர். இந்த முறையும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கர்நாடகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு அன்பை நேசிக்கும் அரசு. இந்த அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும். முதலாவது மந்திரிசபை கூட்டத்தில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இது மட்டுமின்றி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

பா.ஜனதா போல் நாங்கள் பொய் கூற மாட்டோம். நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம். நாங்கள் மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்