இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இலங்கை மக்களுக்கு முழு அளவில் ஆதரவு வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-07-26 14:42 GMT




புதுடெல்லி,



இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னான கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே (வயது 73) தலைமையிலான அரசு இதனை தவறாக கையாண்டது என கூறி போராட்டம் வலுத்தது.

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் அவர்கள் குவிந்தனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார்.

அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார். பின்னர், மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். அதிபர் பதவியில் இருந்தும் விலகினார். புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார். எனினும், அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலு பெற்று வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபரான ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி கடிதம் வழியே வாழ்த்து தெரிவித்து கொண்டார். அந்த கடிதத்தில், இலங்கையின் 8வது ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கைக்கு நெருக்கடியான காலத்தில் நீங்கள் இந்த பதவியை ஏற்று இருக்கிறீர்கள். உங்களின் பதவிக்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதுடன் இலங்கையின் அனைத்து குடிமக்களின் விருப்பங்களும் நிறைவேறும் என நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இலங்கையில், நிறுவப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான தேடலுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் வாழ்த்து கடிதத்தில் பிரதமர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்