பிரதமர் மோடியை வரவேற்க முடியாது... ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட் டுவிட் பதிவு
பிரதமர் மோடியை வரவேற்க முடியாது என ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட் டுவிட்டரில் விளக்கம் அளித்து உள்ளார்.
ஜெய்ப்பூர்,
பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு இன்று வருகை தருகிறார். சிகார் நகரில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட அல்லது பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் டுவிட்டரில் இன்று வெளியிட்ட செய்தியொன்றில், பிரதமர் மோடி அவர்களே. நீங்கள் ராஜஸ்தானுக்கு வருகிறீர்கள்.
பிரதமர் அலுவலகம் என்னுடைய 3 நிமிட உரையை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளது. அதனால், உரையின் வழியே உங்களை நான் வரவேற்க முடியாது. இந்த டுவிட்டர் பதிவின் வழியே எனது மனப்பூர்வ வரவேற்பை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் வெளியிட்ட செய்தியில், சிகார் நகரில் 2 வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் ஒன்று அரசு நிகழ்ச்சி. மற்றொன்று கட்சி நிகழ்ச்சி.
அரசு நிகழ்ச்சியானது குறிப்பிட்ட இடத்தில் நடைபெற உள்ளது. அதனால், அவர் பங்கேற்க முடியும். எனினும், சிகாரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே கலந்து கொள்ள அவர் விரும்புகிறார். அது இயல்பான நடைமுறை இல்லை என தெரிவித்து உள்ளது.
பிரதமர் மோடி இன்று நடைபெற கூடிய நிகழ்ச்சியில், 1.25 லட்சம் பிரதம மந்திரி கிசான் சம்ருதி மையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தங்க யூரியா திட்டம் ஒன்றையும் தொடங்கி வைக்கிறார். இதன்பின்னர், சிகாரில் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்.