இந்திய ராணுவ படை பிரிவில் மின்சார வாகனங்களை சேர்க்க திட்டம்

பசுமை இல்ல வாயுக்கள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இந்திய ராணுவ படை வரிசையில் மின்சார வாகனங்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2022-10-13 05:42 GMT



புதுடெல்லி,


உலக வெப்பமயம் ஆகுதல், பருவகால மாற்றம் உள்ளிட்ட காரணிகளை சுட்டி காட்டி சர்வதேச அளவில் எரிபொருளை சார்ந்திருக்கும் நிலையை நாடுகள் மாற்றும் நோக்கில் செயலாற்றி வருகின்றன. இந்தியாவும், மாற்று எரிபொருள் பயன்பாட்டை நோக்கி பயணித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவ படை வரிசையில் மின்சார வாகனங்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்திய ராணுவத்தில் இலகு ரக வாகனங்களில் 25 சதவீதமும், ராணுவ பேருந்துகளில் 38 சதவீதமும், தேர்ந்தெடுக்கப்பட்ட படை பிரிவில் உள்ள மோட்டார் சைக்கிள்களில் 48 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படும்.

பல்வேறு வகையான நிலப்பகுதிகளில் மின்சார வாகனங்களின் தேவை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்கேற்ப, அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்கு வெளியே வாகன நிறுத்தும் இடங்களில் மின்சார சார்ஜிங் வசதிகளை செய்வதற்கேற்ற உட்கட்டமைப்பு பணிகள் போதிய அளவில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட உள்ளன.

சூரிய சக்தி சார்ந்த சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், கார்பன் பயன்பாடு பூஜ்ய அளவுக்கு குறைப்பதற்கான இலக்கு பூர்த்தியடையும்.

பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களை குறைக்கவும், புதைபொருள் படிவங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள் பயன்பாட்டை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து விடுபடும் நோக்கிலும் இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்