பினராயி விஜயன் துன்புறுத்துகிறார்" - ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு புகார்
குற்றப்பிரிவு அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக ஸ்வப்னா சுரேஷ் புகார் கூறியுள்ளார்.
கோழிக்கோடு,
தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் மற்றும் மந்திரி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல், கூட்டு சதி ஆகிய 3 வழக்குகள் குறித்து ஸ்வப்னா சுரேசிடம் கேரள குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: என் மீது பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அடிப்படையில், அது துன்புறுத்தலாக இருந்தது. எனது வழக்கறிஞர் கிருஷ்ணராஜை வழக்கை விட்டு விலகும்படி வலியுறுத்தினர். விசாரணை என்ற பெயரில் முதல் மந்திரி பினராயி விஜயன் என்னை சாப்பிட கூட விடாமல் துன்புறுத்துகிறார்.
பொதுமக்களை காக்க வேண்டிய கேரள முதல் மந்திரி, தற்போது என்னை பட்டினி கிடக்க வைத்துள்ளார். நான் உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிப்பதால் அவர் என்னை துன்புறுத்துகிறார். அவரது மகளுக்கு எதுவும் அவரால் செய்யமுடியல்லை. நம் அனைவரையும் அவர் தமது மகளாக கருத வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.