மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருமுக்கிய தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
சித்ரதுர்கா முருக மடத்தில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு முக்கிய தலைவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட 47 புகைப்படங்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
சிவமூர்த்தி முருகா சரணரு
சித்ரதுர்கா மாவட்டத்தில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மடத்திற்கு சொந்தமான பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் இவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோா்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்தநிலையில் முருக மடத்திற்கு இன்னும் மடாதிபதி நியமிக்கப்படாத நிலையில் அங்குள்ள முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தற்போது மடம் இயங்கி வருகிறது.
ஜனாதிபதி
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை மடத்தில் தூக்கி கொண்டிருந்த ஒருவர் எழுந்து பாா்த்தபோது மடத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மடாதிபதியின் புகைப்படங்கள் திருட்டுப்போய் இருந்துள்ளது. அதில் ஜனாதிபதி, பிரதமர், முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்களுடன் ேசா்ந்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மடத்தில் இருந்தவர்கள் உடனே சித்ரதுர்கா டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்போில் போலீசார் மடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
47 புகைப்படங்கள் திருட்டு
பின்னர் மடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 2 மர்மநபர்கள் அங்கிருந்த புகைப்படங்களை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இதில் மொத்தம் 47 புகைப்படங்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.