பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதாகவும், இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், பிரதமர் மோடியை 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி பாத்திமா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி எஸ்.சி.சர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் ஜோந்தாலே ஆஜரானார். அப்போது, "இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுதாரர் அணுகியுள்ளாரா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில், மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.