ஒலிபெருக்கி

கர்நாடக அரசியல் குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காண்போம்.

Update: 2023-04-24 18:45 GMT

பெங்களூரு:

ராகுல்காந்தி தலைமையில் கர்நாடகத்தில் காங்கிரசை அழிக்கும் பணி நடக்கிறது

ராகுல்காந்தி கர்நாடகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ளார். அவரது தலைமையில் மாநில தலைவர்களும் சேர்ந்து காங்கிரசை இடித்து அழிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். காங்கிரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உத்தரவாத அட்டை வழங்குகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல். அறிவார்ந்த மக்கள் காங்கிரஸ் கடசியை வேரோடு பிடுங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய கூடாது என ஜனதாதளம்(எஸ்) கட்சி காத்திருக்கிறது. அது நடக்காது. பா.ஜனதா மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

- விஜயேந்திரா எடியூரப்பா, பா.ஜனதா வேட்பாளர்.

லிங்காயத் விவகாரத்தில் எனது கருத்தை திரிக்கிறார்கள்

லிங்காயத் விவகாரத்தில் நான் கூறாத கருத்தை கூறியதாக பா.ஜனதாவினர் திரித்து கூறி வருகிறார்கள். இவ்வாறு எனக்கு எதிராக லிங்காயத் மற்றும் வீரசைவ சமுதாயத்தினரை திசை திருப்ப பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள். ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதிக்கு டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல. பிரதமர் தான் காரணம் என பிரகலாத் ஜோஷி கூறுகிறார்.

- சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர்.

பா.ஜனதாவினர் பிரசாரத்திற்காக அமெரிக்க அதிபரை அழைத்துவரட்டும்

பா.ஜனதாவினர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய யாரை வேண்டுமானாலும் அழைத்துவரட்டும். ஏன் அமெரிக்கா, ரஷிய அதிபர்களையும் அழைத்து வரட்டும். எங்களுக்கு தேவேகவுடாவும், குமாரசாமியும் போதும். எங்களுக்கு சாணக்கியர்கள், மக்கள் தான்.

-எச்.டி.ரேவண்ணா, ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர்.

முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது

முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதாவது எனது தொகுதி மக்கள் நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த குரல் மாநிலம் முழுவதும் ஒலிக்கும் போது, அந்த பதவியை தரும்படி கேட்பேன். சிக்கமகளூரு தொகுதியில் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ரகசிய கூட்டணி அமைத்துள்ளது.

-சி.டி.ரவி, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர்.

பா.ஜனதா கட்சியையும் ஊழல் சூழ்ந்துள்ளது

கர்நாடகத்தில் கொரோனா தொற்றால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அப்போது ஆறுதல் கூற வராமல் பா.ஜனதாவை சேர்ந்த மும்மூர்த்திகளான பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் எங்கே சென்றார்கள்?. மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால் பா.ஜனதாவினர் மதம், சாதி அடிப்படையில் ஓட்டு கேட்க தொடங்கியுள்ளனர். பா.ஜனதாவையும் ஊழல் சூழ்ந்துள்ளது.

-பி.கே. ஹரிபிரசாத், கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர். 

Tags:    

மேலும் செய்திகள்