பா.ஜனதாவின் தவறான ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்
காநாடகத்தில் பா.ஜனதாவின் தவறான ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ராம்நகர் மாவட்டம் கனகபுராவில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முக்கியமான வாக்குறுதிகள்
எல்லா வாக்குச்சாவடிகள் அருகேயும் சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்து பூஜை செய்யுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற நாங்கள் 5 முக்கியமான வாக்குறுதிகளை அளித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளோம்.
இன்று (நேற்று) கர்நாடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். நமது எதிர்காலத்தை நாமே எழுதும் நாள். காங்கிரசின் வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நாள். புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஆர்வம் இருக்கும். மாநிலத்தில் இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
முற்றுப்புள்ளி வைப்பார்கள்
கர்நாடகத்தில் பா.ஜனதாவின் தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இளம் வாக்காளர்கள் அறிவாளிகள். அவர்கள் இந்த பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள். இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ராஜீவ்காந்தி தான் வழங்கினார். அதனால் இளம் வாக்காளர்கள் ஜனநாயகத்தை காக்க வேண்டும். கனகபுரா தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வருகிற 13-ந் தேதி தெரியவரும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.