காங்கிரசின் போராட்டங்களுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள்; பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கடும் சாடல்

ராகுல் காந்தி விவகாரத்தில் காங்கிரசின் போராட்டங்களுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ் செனாவா கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2022-06-16 15:15 GMT

மங்களூரு;

பணப்பரிமாற்றம்

நேஷனல் ஹெரால்டு முறைகேடு விவகாரத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தியிடம் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்யும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ் செனாவா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேறுபாடு கிடையாது

ராகுல் காந்தி மீது முறைகேடு புகார் எழுந்துள்ளது. அதனை விசாரிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அமலாக்கத்துறையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தியை பாதுகாக்க போராட்டம் நடத்துவது தவறு. சட்டம் அனைவருக்கும் சமமானது.

அதில் உள்துறை மந்திரி, பிரதமர் என்ற வேறுபாடு கிடையாது. அமலாக்கத்துறை யாருக்கு எதிராக நோட்டீசு அனுப்புகிறதோ அவர்கள் கட்டாயம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

காங்கிரசார் போராட்டம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப்படுவதும், காயம் அடைவதும் சாதாரண பொதுமக்கள் தான். காங்கிரசாரின் இந்த போராட்டங்களுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்