சிக்கமகளூரு சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்கள்; போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்
சிக்கமகளூரு சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்து வருவதால் நடவடிக்கை எடுக்கும்படி பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
கர்நாடகத்தில் சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டங்களில் சிக்கமகளூரு மாவட்டமும் ஒன்று. இங்குள்ள ஒரநாடு அன்னபூர்னேஸ்வரி அம்மன் கோவில், சிருங்கேரி சாரதா அம்மன் கோவில், மூடிகெரே சார்மடி மலைப்பகுதி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் பாபாபுடன் கிரி, முல்லையன்கிரி மலை, மாணிக்கதாரா அருவி ஆகியவை சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் இடங்களாக உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை பார்வையிட கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் கூட்டம் சுற்றுலா தலங்களில் அலை மோதியது.
சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் அனைத்தும் சிருங்கேரி, சார்மடி, ஒரநாடு, மூடிகெரே சாலைகளில் நிறுத்தப்படுவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சார்மடி மலைப்பகுதியில் இருந்து கொட்டும் நீர்விழ்ச்சியை சாலைகளில் நின்றபடியே சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதிகளில் வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாபாபுடன் கிரி, முல்லையன்கிரி, மாணிக்கதாரா அருவிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால், இரவு வெகுநேரமாகியும் சுற்றுலா பயணிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.