திரிவேணி சங்கமம் கும்பமேளாவில் மக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும்- மந்திரி நாராயணகவுடா வேண்டுகோள்
திரிவேணி சங்கத்தில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியில் மக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று மந்திரி நாராயணகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மண்டியா:
கும்பமேளா விழா
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் மண்டியா விஜயநகர் பகுதியில் உள்ள சுத்தூர் மடத்தில் நடந்தது.
இதில் சுத்தூர் மடத்தின் மடாதிபதி ராகவேந்திரா சுவாமி மற்றும் ஆதி சுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்த சுவாமி மற்றும் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபலய்யா, விளையாட்டு துறை மந்திரி நாராயணகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விளையாட்டு்த்துறை மந்திரி நாராயணகவுடா கூறியதாவது:-
மடாதிபதிகள் அறிவுறுத்துதலின்படி திரிவேணி சங்கமம் கும்பமேளாவை எப்படி நடத்தவேண்டும் என்பது குறித்து 2 கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு பிறகு.......
2013-ம் ஆண்டு கும்பமேளா நடந்தது. தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதுவும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெறுவது மிகவும் புண்ணியமானது. இந்த கும்பமேளாவில் கே.ஆர்.பேட்டை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொள்வார்கள். இதில் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ள இருக்கிறார். மாநில முதல்-மந்திரி தரப்பிலும் வேண்டிய உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். இதில் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும். இந்த கும்பமேளாவிற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விழா முழுவதும் மக்களுக்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.